கொரோனா தடுப்பு ஆய்வுக்காக நாளை கோவை வரும் தன்னை வரவேற்க யாரும் வரவேண்டாம் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னையில் வெகுவாகக் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கோயம்புத்தூரில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் கோயம்புத்தூர் மற்றும் இதுபோல கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஸ்டாலின் மே 30 ஆம் தேதி (நாளை) மீண்டும் கோயம்புத்தூர் செல்ல உள்ளார்.
இந்நிலையில் அவர் திமுகவினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதில், திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் வர வேண்டாம். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதே தனக்கு அளிக்கும் சிறப்பான வரவேற்பு என தெரிவித்துள்ளார்.