திமுக தலைவர் ஸ்டாலின் ரஜினி மற்றும் கமலுடன் கூட்டணி அமைத்து வாக்கு சதவீதத்தை உயர்த்திக்கொள்ள விருப்பப்படுவதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.
ரஜினியும் கமலும் அரசியலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ் ஏ சி சந்திரசேகர் கமல் 60 நிகழ்ச்சியில் பேசினார். அதன் பின் அது தொடர்பான பேச்சுக்களே தமிழக அரசியலில் நிறைந்துள்ளன. இந்த விவாதங்களை ஊக்குவிக்கும் விதமாக ரஜினியும் கமலும் தனித்தனியாக அதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம் எனக் கூறியுள்ளனர்..
இந்நிலையில் காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்துவரும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் ‘நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்தால் நல்லது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் இப்போது கூறுகிறார். அவர்கள் இருவரும் 10 சதவீத வாக்குகளை கைப்பற்றுவார்கள். திமுக அவர்களோடு கூட்டணி சேர்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அப்படி சேர்ந்தால் திமுக வைத்துள்ள 18 சதவீத வாக்குகளை சேர்த்தால் 28 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதனால்தான் ரஜினி கமலுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளில் திமுக ஈடுபட்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.