பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் தங்களிடம் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வதாகவும், பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் ஒரு மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெறும் பிரகாஷ் என்ற மாணவர் மேடைக்கு வந்தபோது, கவர்னரிடம் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்தார்.
தனக்கு வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை பேராசிரியர்கள் செய்யச் சொல்கிறார்கள் என்றும், இந்த முறைகேடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக நிர்வாகம் குறித்து மாணவர் ஒருவர் கவர்னரிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.