ஜெர்மனியை சேர்ந்த லுப்தன்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம். கடந்த கோரோனா காலக்கட்டத்தில் விமான பயணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பு அடைந்தன. இதனால் விமான நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஆகியவை வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது இயல்புநிலை திரும்பி அனைத்து நாடுகளிலும் விமான சேவைகள் சீராக செயல்பட்டு வரும் நிலையில் லுப்தான்சா நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டக் கொடி தூக்கியுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியிருந்த இவர்கள் இன்று மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ஃப்ராக்பர்ட் விமான நிலையம் செல்லும் லுப்தான்சா விமானத்தை இயக்காமல் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் சிக்கலை சந்தித்துள்ளனர்.