பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்கள் அளிக்கப்படுக்கிறது.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடி செய்த நிலையில் பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.