தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களின் உடலை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடியி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை முடிந்து அறிவிப்பு வெளியாகும் வரை உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களின் உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அவர்களின் உடலை பதப்படுத்தி வைக்க முடியாது என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் கேட்கிறார்கள். எனவே, தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உயிரிழந்தவர்களின் உடல் மீது உங்களுக்கு என்ன அக்கறை? அவர்களின் உடலை உயிரிழந்தவர்களின் உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசு ஏன் மனு தாக்கல் செய்கிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உடலை பதப்படுத்தி வைக்க வேண்டும். ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.