தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என நடிகரும் பாஜக பிரதிநிதியுமான எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறார்.
நடிகரும் பாஜக பிரமுகரான எஸ்.வி சேகர் கடந்த வருடம் பெண் பத்திரிக்கையாளர்களை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். இதற்கு மாநிலம் முழுவதிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததால் பின்னர் அந்த முகநூல் பதிவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.
இருப்பினும் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது பல்வேறு தரப்பினர் தமிழகமெங்கிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கரூரில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக கரூர் சென்றிருந்த எஸ்.வி.சேகர் வழக்கு விசாரணையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் என்ன ஆகப்போகிறதோ என நினைத்தோம்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.