Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தமிழகம் எதிலும் முதலிடம்..! மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி..!! திமுக அறிக்கை....

MK Stalin

Senthil Velan

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (12:39 IST)
தமிழ்நாடு எதிலும் முதலிடம், அதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி என்ற தலைப்பின் கீழ் திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், “பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள், சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.
 
அதன்படி உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 - 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது. இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான விவரங்களை நிர்யாத் என்ற ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம், தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், குஜராத் 12.72 புள்ளிகளையும், பீகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.
 
ஆண்டு வாரியாக சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின் படி, நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.


மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த டாக்டர் ராமதாஸ்..!