அம்பன் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது, இதற்கு அம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. புயலின் வீரியத்தை அளவிட அவற்றிற்கு தீவிர புயல், அதி தீவிர புயல் போன்ற தரவரிசை பெயர் வழங்கப்படுகிறது.
இதில் அம்பன் புயல் உச்சக்கட்ட நிலையான அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா முதல் வங்க தேசத்திற்கு இடையேயான பகுதியில் அம்பன் கரையை கடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று, மாறாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பொழிவும், காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, வல்லம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கணமலைப்பட்டி, பரம்பூர், சித்தன்னவாசல் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கனமழை.
திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் புயலால் வெப்ப அதிகரிக்கும் என கூறப்பட்ட நிலையில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.