வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சில பகுதிகளில் ஓரளவு மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.