தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றுகள் சந்திக்கும் நிலை தற்போது நிலவுகிறது. இதன் தாக்கமாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிகாற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும், சில இடங்களில் வெப்பம் சற்று அதிகரிக்கலாம்.
மேலும், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சாதாரண நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். இதனால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சென்னை குறித்து சொல்வதானால், இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். நாளையும் இதேபோன்ற வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது.