வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. வங்கக்கடலில் தென் கிழக்கில் - நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நீடிக்கிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கிழக்கு - வடகிழக்கில் நகர்ந்து இன்று வலுவடையக்கூடும்.