தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
பா.ம.க கட்சியிலிருந்து தனது ஆதரவளர்களுடன் வெளியேறிய வேல்முருகன் தமிழ் தேசிய கொள்கையை மையப்படுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். சமூக செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வேல்முருகன் அரசியல் களத்தில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது இந்த இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பா.ம.க தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் பா.ம.கவை எதிர்ப்பதற்காக வேல்முருகன் தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்றும் பேச்சு அடிப்படுகிறது. ஆனால் பா.ம.க ராமதாஸ் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருக்கிறார். கொள்கையளவில் பாஜகவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டது தமிழக வாழ்வுரிமை கட்சி. அதனால்தான் வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார் என அவரது கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய ஜனநாயக கட்சி பா.ம.கவுக்கு எதிராக தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சூழலில், வேல்முருகனின் திமு.க ஆதரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதரவு மனநிலை எதிர்காலத்தில் கூட்டணி வைப்பதற்கான அஸ்திவாரமாக இருக்கலாம் என்ற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.