வேலூர் மக்களவை தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே அ.தி.மு.க வெற்றிப்பெற்றதாக தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்த பேட்டி அவரை கிண்டலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கடந்த 5ம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முதல் 6 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில் அ.தி.மு.க முன்னிலையில் இருந்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு தி.மு.கவின் கை ஓங்க தொடங்கியது. இறுதியாக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த்.
காலை அதி.மு.க முன்னிலையில் இருப்பதை கண்டு பலர் அ.தி.மு.கதான் வெற்றிபெறும் என நம்பினார்கள். முற்பகல் வேளையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் “அ.தி.மு.கவின் இந்த வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததுதான். இந்த வெற்றிக்காக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் இணைந்து உழைத்துள்ளனர். இந்த வெற்றி வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்” என பேட்டியளித்தார்.
வெற்றி பெறுவதற்கு முன்னாலேயே அவசரப்பட்டு தமிழிசை அளித்த இந்த பேட்டியை பலரும் கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து ஒன்றும் சொல்லமுடியாத பாஜக தொண்டர்கள் முடிவு வரும் வரை கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே என மனம் வருத்தம் கொள்வதாக கூறப்படுகிறது.