பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுடன் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தமிழக பாஜக தரப்பிலிருந்து ஆதரவு இல்லாத காரணத்தால் தமிழிசை சவுந்தரராஜன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து அன்புமணி ராமதாஸுக்கும் தமிழிசைக்கும் மோதல் உருவானது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக்கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ் என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என தமிழிசை சவால் விட்டார்.
தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி “நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். அதனால் தமிழிசை சவுந்தரராஜன்தான் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் யார் அறிவாளி என விவாதம் நடத்த நான் தயார்” என தெரிவித்தார்.
இதுஒருபுறம் இருக்க, தமிழிசையின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தமிழிசையை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டமும் அறிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் தமிழிசை மட்டுமே தனியாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாரே தவிர, தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, இல.கணேசன், வானதி சீனிவாசன் ஆகியோர் தமிழிசைக்கு ஆதரவாகவோ, பாமகவை கண்டித்து எதுவுமே பேசவில்லை. இது, தமிழிசையை மிகவும் நோகடித்துவிட்டதாம். இதுபற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி அவர் புலம்பியதாக கூறப்படுகிறது.
அதோடு, தனது மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டெல்லி மேலிடத்திற்கு அவர் தெரிவித்துவிட்டார் எனக்கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமித்ஷா வரை சென்றுவிட விரைவில் கோஷ்டி பூசலை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.