தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்து வருவதால் தேர்தல் நடத்துவதில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் இருந்து வருவதால் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. முன்னதாக சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், இதனால் வாக்குசாவடி எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மற்ற மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களை கூடுதலாக கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.