கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் சில பணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு மே 17 வரை அமலில் உள்ளது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ”சென்னை காவல்துறைக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பிற தனி கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும்.
சென்னை தவிர்த்து அனைத்து தமிழக பகுதிகளிலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பிற தனி கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படலாம்.
சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் டீ கடைகள் பார்சல் மட்டும் வழங்க காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.
மேலும் டீ கடைகள் சமூக இடைவெளியை பேணவும், நாளுக்கு 5 முறை கிருமி நாசினி தெளிக்கவும் வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ அமர்ந்தோ எதையும் உட்கொள்ள அனுமதி கிடையாது. மீறும் கடைகள் சீல் வைத்து மூடப்படும்.
பெட்ரோல் பம்புகள் சென்னை நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், மற்ற தமிழக பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.
சென்னை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.