ஊரடங்கால் மக்கள் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வீட்டிலிருந்தபடியே முக்கிய கோவில்களின் தரிசனத்தை காண புதிய தொலைக்காட்சியை தமிழக அரசு தொடங்கவுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தளங்களை திறக்க வேண்டுமென பலர் ஒற்றைக்காலில் நிற்பது உள்ளிட்ட நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கோவில்களை திறந்தால் சமூக இடைவெளி பின்பற்றுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகி விடும் என தமிழக அரசு யோசித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆலய தரிசனம் மேற்கொள்ள புதிய 24 மணிநேர லைவ் பக்தி சேனலை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு 8.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய சேனலுக்கு “திருக்கோயில்” என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய திருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகள் இந்த சேனல் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.