தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் சென்னையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தங்கவைப்பதற்காக 19 கல்லூரிகள் தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திலேயே அதிகமான கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. அங்கு இதுவரை 23,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கூடிய விரைவில் மருத்துவமனைகளில் இட நெருக்கடி ஏற்படலாம் என தெரிகிறது. மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோரும் சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றனர்.
இதையடுத்து 19 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்றத் தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கல்லூரிகளில் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், லேசான பாதிப்பு உள்ளவர்களையும் அனுமதித்துவிட்டு, தீவிர பாதிப்புக்கு ஆளானவர்களை மட்டும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.