நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக – கேரள எல்லைகளை மூடுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு இத்தாலியர் உட்பட 5 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
தமிழக அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி மதுரைக்கு சென்றதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் தமிழக – கேரள எல்லைகளில் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதியை முழுமையாக மூடுவதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 6 மணி முதல் அமலாகும் இந்த தடை உத்தரவை தொடர்ந்து கேரள வாகனங்கள் தமிழகம் வர தடை செய்யப்படும், மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 9 சுங்கச்சாவடிகளும் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.