திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியை சுற்றி 2 மணி நேரமாக வட்டமடித்து பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளுடன் இன்று மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கியதும் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் சிக்கிக் கொண்டதால், விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவானது.
ஆனால் விமானம் இறங்கும்போது தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடிப்பது என முடிவானது. அதன்படி திருச்சி, புதுக்கோட்டை இடையே 26 முறை வானில் விமானம் வட்டமடித்தபடி இருந்தது.
விமானம் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், மீட்பு குழுவினர் அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பின்னர் 8.15 மணியளவில் விமானம் மெதுவாக ஓடுதளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அதிலிருந்து பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானிகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K