மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
திருக்கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.10.2021) சென்னை, வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், திருக்கோயில் நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடக்கம், ஒரு இலட்சம் தல மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடும் திட்டம், அர்ச்சகர்கள், ஒதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிகழ்வு, அன்னைத்தமிழில் அர்ச்சனை, தமிழில் அர்ச்சனை செய்வதற்காக 14 போற்றி நூல்கள் வெளியீடு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 5.9.2021 முதல் அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 7.9.2021 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், திருக்கோயில்களில் பணிபுரியும் தலைமுடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகையாக ரூபாய் 5,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, திருக்கோயில்களில் பணிபுரியும் 1744 முடி திருத்தும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000/- ஊக்கத் தொகை அந்தந்த திருக்கோயில்களிலிருந்து வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 10.47 கோடி செலவிடப்படும். இதனால் திருக்கோயில் முடிதிருத்தும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.