முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் அதிகளவில் வெளியே செல்வதால் தமிழக அமைச்சர்கள் சிலருக்கே கொரோனா தொற்று பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் கே.பி அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று தமிழக முதல்வர் கே பழனிச்சாமி மற்றும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமான செய்தியைப் பகிர்ந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய எம் எல் ஏ வுமான தங்கம் தென்னரசு ‘இத்தனை நாள் சொன்ன புள்ளிவிவரம் எல்லாம் போய்ட்டுப் போகுது. இதுவாவது உண்மையா இருக்கணும்ன்னு உளமார வேண்டுகின்றேன்!’ என தனது முகநூல் பக்கத்தில் கேலி செய்யும் விதமாகக் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் இறப்பு ஆகிய தகவல்களை தருவதில் அதிமுக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லை என திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.