Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி! – சீமான்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:27 IST)
'ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்தது சரியே' என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''காஷ்மீரின் சிறப்பு அதிகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துசெய்து, தன்னாட்சியுரிமையை முழுமையாகப் பறித்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காஷ்மீர் மக்களின் உணர்வுக்கும், விருப்பத்துக்கும் மாறாக, தான்தோன்றித்தனமாக அம்மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து, ஜம்மு, காஷ்மீர், லே-லடாக் என மூன்று பிரதேசங்களாக துண்டாக்கி அறிவித்த பாஜக அரசின் நடவடிக்கையானது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்; அரசப்பயங்கரவாதத்தின் செயல்வடிவம்! அதனை வழிமொழிந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுப்பேரவலமாகும்.

காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல்,  மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து, அம்மாநிலத்தைப் பிளந்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தையும் பிளந்துப் பிரித்து, அவற்றை ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றக்கூடிய வானளாவிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருப்பதாகக் கூறுகிறது இத்தீர்ப்பு.

இனி எந்த மாநிலம் ஒன்றிய அரசால் துண்டாடப்பட்டு, அவை ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டாலும் சட்டப்பூர்வமாக அதனை ஒன்றும்செய்ய முடியாதெனும் பேராபத்துக்கு இத்தீர்ப்பின் மூலம் அடிகோலியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இது மாநிலங்களின் தன்னாட்சியுரிமைக்கும், கூட்டாட்சித்தத்துவத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டாகும். மேலும் இந்திய பெருநிலத்தில் அரச வன்முறையாலும், அதிகார முறைகேட்டினாலும் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்ட காஷ்மீரிய மக்கள், தனது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்த சனநாயகத்தின் கடைசிப் படிநிலையான உச்ச நீதிமன்றமும் அவர்களைக் கைவிட்டது மிகத் தவறான முன்னுதாரணமாகும். எவ்வித சனநாயக மரபுகளையும், மாண்புகளையும் பின்பற்றாது, அடக்குமுறையை ஏவி, ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு நிகழ்ந்த காஷ்மீரின் சிறப்பு அதிகாரப்பறிப்பை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி; காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதி!''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments