ரவுடிகள் தாக்கி பாதிக்கப்பட்ட நபரை சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி,ஸ்டெரக்ச்சரில் வைத்து இழுத்து வந்து ஆளுநர் மாளிகையை முன்பு முற்றுகை!
, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:47 IST)
புதுச்சேரி
இந்திராகாந்தி சிக்னல் அருகில் நூறடி சாலையில் பெட்டிக்கடைக்கடை நடத்தி வருபவர் சந்திரன்.நேற்று இரவு சந்திரன் கடைக்கு வந்த மூன்று ரவுடிகள் மாமூல் கேட்டு சந்திரன் கடையை அடித்து நொறுக்கி, சந்திரனை கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சந்திரனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவமனையை கண்டித்தும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றச்சாட்டி, சந்திரனை ஸ்டெரக்ச்சரில் படுக்க வைத்து சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் சமூக அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு உள்ளே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சந்திரனை ஸ்டெரக்ச்சரில் சட்டப்பேரவை வழியாக இழுத்து வந்து, ஆளுநர் மாளிகை வெளியே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் புதுச்சேரி அரசு மற்றும் ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் சமூக அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் ஆளுநர் மாளிகை வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட சந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்து, சந்திரனை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் இல்லாததால், சமூக அமைப்பினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும் சமூக அமைப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்