Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஈஷா நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் வரும் 25-ம் தேதி தொடக்கம்

sadhguru
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (20:13 IST)
‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மாநில அளவிலான கபடி போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
 
இது தொடர்பாக ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
ஈஷா அவுட்ரீச் அமைப்பானது கிராமப்புற மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் கிராமிய விளையாட்டு திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. விளையாட்டு போட்டிகளை கிராம மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற்றி, அதன்மூலம் அவர்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது தான் இத்திருவிழாவின் பிரதான நோக்கம்.
 
15-வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 இடங்களில் வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
 
இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக மாநில அளவிலான கபடி போட்டிகளையும் நடத்த உள்ளோம். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இப்போட்டிகள் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்க உள்ளது. சேலம் மாவட்ட அணிகளுக்கான கபடி போட்டிகள் சங்ககிரி தாலுகாவில் உள்ள சாமி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
 
மாவட்டம், மண்டலம், மாநிலம் என 3 கட்டங்களாக இப்போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆண்கள் பிரிவில் 70 அணிகளும், பெண்கள் பிரிவில் 20 அணிகள் வரையிலும் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கிறோம். மாவட்ட அளவில் வெவ்வேறு அணிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு ஒரு அணியாக தேர்வு செய்யப்படுவார்கள். மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
 
இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள்.
 
இதில் பங்கேற்க விரும்பும் அணிகள்  https://isha.co/gramotsavam-tamil  என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 
இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார்.
 
மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரக்ஞானந்தா: 'சதுரங்க ராஜா' பட்டத்தை நெருங்கும் 'தமிழ்நாட்டு பையன்'