தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இவ்வணையில் இருந்து ஆண்டுதோறும் தமிழக அரசின் உத்தரவின் படி பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
அதன் படி இன்று காலை வைகை அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா ஆகியோர் வினாடிக்கு 900 கன அடி தண்ணீரை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பெரியார் வைகை வடி நில கோட்ட பொறியாளர் அன்புச் செல்வம், பெரியார் பிரதான கோட்டப் பொறியாளர் மேலூர் சிவ பிரபாகர், வைகை அணை உப கோட்ட உதவி செயற் பொறியாளர் , விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்.....
தமிழக முதல்வர் ஆணையின் படி தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசனத்திற்கு 45,041 ஒரு ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர், அணையில் இருந்து நேற்று முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும் அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்து என ஆக மொத்தம் 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும் வைகை அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்தும், அணையின் தண்ணீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேலும் விவசாயிகள், குறுகிய கால பயிர்களை நடவு செய்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் அடைய பொதுப்பணித்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு தெரிவித்தனர்.