தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலிச் சீமையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மீது மாறா அன்பு கொண்ட மக்களால் சிறப்புற்றது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
என் மக்கள் என் பயணம் , தமிழ் மொழியை அகஸ்திய முனிவர் பெற்ற மண், எம்பெருமான் சிவபெருமானே விவசாயத்திற்கு வேலியாக காத்து நிற்கும் மண், திக்கெல்லாம் புகழுறும் மண்ணான பொருநை எனும் தாமிரபரணி நதி பாயும் திருநெல்வேலிச் சீமையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மீது மாறா அன்பு கொண்ட மக்களால் சிறப்புற்றது. இன்றைய நடைபயணத்தில், மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததற்காக, அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்கு மட்டும், விவசாயத்திற்காக மத்திய அரசு வழங்கிய நிதி ₹2,961 கோடி. நெல்லையில் 20,935 ஹெக்டேர் நிலங்கள், பிரதமரின் பாசன மேம்பாட்டுத் திட்டத்தில் பலனடைந்துள்ளன. நெல்லை, நாட்டின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. விளையாட்டு அரங்கங்கள், வர்த்தக மையம், பேருந்து நிலையங்கள் என 84 திட்டங்கள், ₹965 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில், வந்தே பாரத் ரயிலும் நெல்லைக்கு வரவிருக்கிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் கடந்த ஒன்பது ஆண்டு கால நல்லாட்சியில், மாண்புமிகு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அவர்கள் முன்னெடுப்பில், சுற்றுச் சூழல் மற்றும் வனங்களைப் பாதுகாப்பதில் நம் நாடு முன்னேற்றப் பாதையில் உள்ளது.
வனப்பகுதிகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்தியாவில் 75 இடங்களும், தமிழகத்தில் 14 பகுதிகளும் நமது மத்திய அமைச்சர் முயற்சியில் சதுப்பு நிலங்களுக்கான உலகளாவிய ராம்சர் குறியீடு பெற்றிருப்பது நமக்குப் பெருமை. இது யுனெஸ்கோ நமக்கு வழங்கிய அங்கீகாரம். தமிழக மக்கள் சார்பாக நமது மத்திய அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் நிதியமைச்சர் திரு சிதம்பரம், இந்தியாவில் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சாத்தியமில்லை என்று பாராளுமன்றத்தில் பேசினார். இன்று, இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அமைச்சர், பெங்களூரில் ஒரு காய்கறிக் கடையில் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்து நமது பிரதமரைப் பாராட்டுகிறார். கடந்த மாதம் மட்டும், 15.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நம் நாட்டில் நடந்துள்ளன. ஆனால் காங்கிரஸும், திமுகவும், நமது நாட்டையும் மக்களையும் குறைத்து மதிப்பிடுகின்றன. இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 205 கிராமங்கள் முதன்முறையாக ப்ராட்பேண்ட் இணையதள வசதி பெறவுள்ளன. மத்திய அரசின் பாரத் நெட் மூலம் இது சாத்தியமாகிறது. இப்படி ஒவ்வொரு கிராமங்களையும் முன்னேற்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
நரேந்திரமோடி அவர்கள் தொடர்ந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
மோடியின் முகவரி : திருநெல்வேலி
முத்ரா கடனுதவி மூலம் தொழிலதிபரான திருமதி ராமலட்சுமி, வருடம் ₹6,000 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் மூலம் பயனடையும் திரு சுப்பையா, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திரு ஆறுமுகம், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறை வசதி பெற்ற திருமதி சரஸ்வதி, செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ள திருமதி திரௌபதி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
ஆனால் திமுகவோ, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, இன்று, குடிக்கவோ குளிக்கவோ உகந்ததற்ற அளவுக்கு மாசுபடிந்து கிடக்கிறது. ஆனால் திமுகவுக்கு, டாஸ்மாக் விற்பனைதான் முக்கியம். உலக அளவில் காலநிலை மாற்றத்தில் அதிக ஆபத்து சந்திக்கும் பகுதிகளில் முதல் ஐம்பது இடத்தில் தமிழகமும் இருப்பது வேதனை. திமுக அமைச்சர் சிவ மெய்யநாதனோ, மெத்தனமாக இருக்கிறார்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அவர்கள் தலையிட்டு, தாமிரபரணி நதியை மீட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நீர் நிலைகளைப் பராமரிக்கும் பணியில், 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, நீர்நிலைகளில் மணல் கடத்துபவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறது. அந்த அளவுக்கு ஊழல் திமுக ஆட்சியில் கனிம வளக் கொள்ளை நடக்கிறது. 10 லட்சம் வேலைவாய்ப்பு, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் சிப்காட் என திருநெல்வேலிக்கான ஒரு வாக்குறுதியைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவில், திமுக பெண் கவுன்சிலர்களுக்கே பாதுகாப்பில்லை. தான் கூறிய நபர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார் திமுக பொறுப்பாளர். திமுக மேயர் சரவணன் மீது 35 கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை எதிர்த்து திமுக போராட்டப் பிரிவு தலைவி திருமதி கனிமொழி போராடுவாரா?
நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்றார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. நெல்லையும் இனிமேல் திமுகவுக்குத் தொல்லைதான் என்று கூறாமல் கூறியிருக்கிறார்கள் இன்று பெரும் திரளாகக் கூடியிருக்கும் நெல்லை மக்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வெற்றி பெறச் செய்வோம். ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.