தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சீன பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபர் தங்க போகும் ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியத் திருநாட்டைப் போலவே, மிகப் பண்டைய பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டதுமான சீன தேசத்தின் அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜீ ஜின்பிங் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன் என சீன அதிரப் வரவை வரவேற்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியையும் சீன அதிபரையும் வரவேற்கும் ஸ்டாலினுக்கு நன்றி. இதுபோல் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் தமிழகத்துக்கு நன்மையே பயக்கும் என பதிவிட்டுள்ளது.