தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய தமிழகத்தில் இருந்து கிளம்புகிறார். அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பும் வரை அவரது முதல்வர் பொறுப்பை வேறொருவர் ஏற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது துறைகளை கூட யார் கவனிப்பார்கள்? என்ற செய்தி இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இதற்கு முன்னால் தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள் வெளிநாடு சென்றபோது என்னென்ன நடந்தது என்பதை பார்ப்போம்
1968-ல் முதல்வராக இருந்த அண்ணா அமெரிக்க சென்றபோது அமைச்சர்களாக இருந்த நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதியிடம் தனது துறைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு சென்றார்
1969-ல் அண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாதபோது அவரது துறைகள் 4 அமைச்சர்களுக்கும், அவர் இறந்த பிறகு முதல்வர் பொறுப்பு நெடுஞ்செழியனுக்கும் கொடுக்கப்பட்டது
1970ஆம் ஆண்டு கருணாநிதி வெளிநாடு சென்றபோது அவரது துறைகள் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அமைச்சர்களிடமும், 1978ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்றபோது அவருடைய துறைகள் நாஞ்சில் மனோகரனிடமும் ஒப்படைக்கப்பட்டது
1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது துறைகள் நெடுஞ்செழியனிடம் துறைகள் ஒப்ப்டைக்கப்பட்டன. அதேபோல் 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு ஜானகி முதல்வராக பொறுப்பேற்கும் வரை அவரது பொறுப்புகளை நெடுஞ்செழியனே கவனித்து வந்தார்
1999ஆம் ஆண்டு கருணாநிதி சிங்கப்பூர், மலேசியா சென்றபோது அவரது துறைகள் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்லும்போதும் அவரது துறைகள் யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது