தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி கோரியிருந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதேசமயம் வேல் யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என விசிக சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாஜக அனுமதிய கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலுக்கு சாத்தியம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது.