போக்குவரத்து அபராத உயர்வு குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளும், புதிய அபராதகங்களும் கூட அறிவிக்கப்பட்டன.
இந்த அபராத முறை கடந்த அக்டோபர் 27 ம் தேதி அமலானது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை அதிகரித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி அசாரணை பிறப்பித்த நிலையில், இந்த அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள், ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகள் எனப் பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் காவல்துறையினர் மக்களை துன்புறுத்த வாய்ப்புள்ளதாகவும். அதனால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து, தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.