உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர் திப்ரூகர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் பத்து முதல் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயணிகள் ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்ததும் மீட்பு பணியினர் சம்பவம் இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் 12 பெட்டிகளில் சிக்கி இருக்கும் பயணிகளை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்து எந்தவித தகவலும் இல்லை என்ற நிலையில் மீட்பு பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே மற்ற தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துவரும் நிலையில் இந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. பயணிகள் தங்கள் பெட்டிகளுடன் ரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து இருக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது