அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், இந்த ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள், வேலைக்கு வருகிறோம் என சென்னையில், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையை மட்டும் வழங்கினால் போதும். தற்போதைக்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு 18 மாதம் DA வர வேண்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் அன்று 100% பேருந்துகள் இயங்காது.
இந்த போராட்டத்தால் மக்களுக்கும் அரசுக்கும் பெரும் கஷ்டம் எனவே அமைச்சர் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 55% ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. எங்கள் போராட்டம் வெற்றி பெறுவதற்கான அறிகுறியாக பார்க்கிறோம்.
100% பேருந்து இயக்கப்படுவதாக அரசு கூறுகிறது, தற்காலிக ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள், தற்காலிக பணியாளர்கள் வாகனங்களை இயக்கினால் கண்டிப்பாக விபத்துகள் ஏற்படும், எந்த ஒரு விபத்தும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.