நடந்து முடிந்த தேர்தலிலும் வலிமையான வேட்பாளர்களை களமிறக்கி அதிமுகவை கதிகலங்க செய்தார் டிடிவி தினகரன். இப்போது 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வலிமையான வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளார்.
இந்நிலையில், இந்த தொகுதி பிரச்சாரங்களிலும் அவர் ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பிரச்சாரத்தில் கூறியதாவது, தேர்தலுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவார். தற்போது அதிமுக-விடம் தொண்டர்களுடைய பலம் இல்லை மாறாக அவர்களிடம் பண பலம் மட்டும்தான் உள்ளது.
அதிமுக பாஜகவின் இரண்டும் ஒன்று போலதான் உள்ளது. அதிமுக கொடியுடன் காவி நிறமும், தாமரை சேர்த்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று டிடிவி தினகரன் விமர்சித்தார்.
மேலும், பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள் பார்ப்போம். பாஜகவின் ஏஜெண்டாக அவர் இருந்ததால்தான் பதவியில் இருந்து இறக்கினோம் என்றும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.