அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையும் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெறும்.
அந்த வகையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேடு பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது.
700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் இந்த விழாவில் 900 வீரர்கள் காளைகளை அடக்க களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையும் களமிறங்கியது. ஆனால், இந்த காளை வீரர்கள் யாருக்கும் பிடிபடாமல் மிரட்டல் காட்டியது.
இதேபோல, அதிமுக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும் ஆவேசமாக சீறி பாய்ந்து வீரர்களை பிடிக்க வாய்ப்பே கொடுக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.