அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக செல்வது கட்சிக்குப் பலம்தானே தவிர பலவீனம் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வனையும் இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு இடியாக தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய இசக்கி சுப்பையாவும் இப்போது அமமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணைய இருக்கிறார். இதனை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இவருக்கு சொந்தமான இடத்தில்தான் அமமுக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகிவருவது குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் பிறக்கட்சிகளுக்கு செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தவா முடியும் ?. எங்களால் உருவாக்கப்பட்ட நிர்வாகிகள் பிறக் கட்சிகளுக்கு செல்வதால் கட்சி பலமடையதான் செய்யும்’ எனத் தெரிவித்துள்ளார்.