கட்சித்தலைவர் பதவிக்காக தனிக்கட்சி துவங்கும் தினகரன்?
, செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:28 IST)
புதிய கட்சியை துவங்கும் முயற்சியில் டிடிவி தினகரன் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெ.வின் மறைவிற்கு பின் கட்சி மற்றும் ஆட்சியை தங்களது வசம் வைத்துக்கொள்ள சசிகலா தரப்பு முயன்றது. இதில், ஓ.பி.எஸ் அவர்களுக்கு எதிராக களம் இறங்க, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளரகாவும் நியமித்து விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.
ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு பணப்பட்டுவாடா, மற்றும் இரட்டை இலை விவகாரம் என பல சிக்கல்களில் தினகரன் மாட்டவே, அவரை ஒதுக்கி வைக்கும் முயற்சியில் இறங்கியது எடப்பாடி அணி. அதோடு, ஓ.பி.எஸ் அணியும் அவருடன் கை கோர்த்து விட்டதால், இருவரும் சேர்ந்து தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.
கட்சி மற்றும் ஆட்சி இரண்டும் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி விட்டதை தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் தற்போது நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
எனவே, தன்னுடைய ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள தனிக்கட்சியை தொடங்கும் திட்டத்தில் தினகரன் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், ஒரு அணித்தலைவர் என்கிற இமேஜ் மட்டும்தான் தற்போது தினகரனுக்கு இருக்கிறது. எனவே, தனிக்கட்சி தொடங்கினால் கட்சித் தலைவர் என்கிற பதவி கிடைப்பதோடு, தங்களின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளவும், வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் அது உதவும் என்கிற முடிவிற்கு தினகரன் வந்துள்ளதாகவும், அதற்கான அலுவலகத்தை தேடும் பணியில் அவரின் ஆதரவாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்