எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் டிவிட்.
மேலும் இது குறித்து அவர் தனது டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளதாவது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டிய நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெறப்பட்ட நிலப்பகுதியில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு முறைப்படி மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவமனை அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் மாநில அரசு முடிவெடுக்க விதிகள் அனுமதிக்காது என்பதால், டெண்டர்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லையோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது.
பதவியை விட கொடுத்த வாக்குறுதியே முக்கியம், முதலமைச்சரைப் பார்த்து கொரோனாவுக்கே பயம் என்றெல்லாம் உலக மகா நடிகர்களைப் போல வாய் கூசாமல் வசனம் பேசும் அமைச்சர்கள் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைத்துரோகம் செய்ய துணிவது சரியா?
இதன்பிறகாவது, மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.