கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது, மே 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும், துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டர்தாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, இந்த சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை , தமிழக அரசு நியமித்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
எனவே வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி , தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்காக, ரஜினி நேரில் ஆஜராக வேண்டுமென ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.