கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து டெல்டா பகுதி மக்களை மீட்டெடுக்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நிதியுதவி குவிந்து வருகிறது. தமிழகத்திற்கே சோறு போட்ட டெல்டா பகுதி மக்கள் தற்போது அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு டிவிஎஸ் நிறுவனம் சார்பில் ரூ2 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் நேரில் வழங்கினர். அதே போல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப்பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.
ஏற்கனவே லைகா நிறுவனம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப்பணிகளுக்காக ரூ.1.01 கோடி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருவதால் இந்த நிதியை சரியானபடி பயன்படுத்தி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.