மதுரை அருகே வளையப்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் பட்டியலின பெண்களை சமையல் பணியில் அமர்த்தியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள வளையப்பட்டி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் வேலை காலியாக இருந்தது. மதுரையில் அங்கன்வாடி உள்ளிட்ட பல இடங்களுக்கும் காலியிடங்களை நிரப்ப பலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பட்டியலின பெண்கள் சமையலாளராகவும், உதவியாளராகவும் வளையப்பட்டி அங்கன்வாடிக்கு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியதாகவும், அவர்களை பணி மாற்றம் செய்யும்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவு கூறப்படுகிறது.
இந்நிலையில் பணியமர்த்தபட்ட இரண்டே நாட்களில் அவர்கள் இருவரையும் இரு வேறு ஊர்களுக்கு பணியை மாற்றி தந்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் கூடுதல் பணியின் நிமித்தமே அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியாக அவர்கள் மீது ஒடுக்குமுறை நிகழ்த்தபட்டதா? என சமூக வலைதளங்களில் இந்த பிரச்சினை விவாதம் ஆகியுள்ளது.