சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் குடும்ப விழா ஒன்றில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் கலந்து கொண்டபோது உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஸ்டாலினின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிய நிலையில் ’திமுகவில் விஜய் இணைய இருப்பதாகவும், ரஜினிக்கு போட்டியாக அரசியலில் விஜய்யை இழுக்க திமுக முயற்சி செய்வதாகவும் ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களிலும் மிக வேகமாக பரவியது. அதுமட்டுமின்றி இது குறித்த விவாதங்களும் தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் நடந்தது
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், எங்கள் குடும்ப விழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே விஜய் கலந்து கொண்டார். அதனை வைத்து அவர் திமுகவில் இணைவதாக கட்டுக்கதை வெளியாகியுள்ளது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் - விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்ற போது நடந்த ஒரு யதார்த்தமான சந்திப்பு என்றும் இதனை வைத்து யாரும் கற்பனை கதைகளை இட்டுக்கட்ட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றாலும், அவர் நிச்சயம் ஒரு அரசியல் கட்சியில் இணைய மாட்டார் என்றும், அரசியலுக்கு வருவதாக இருந்தால் தனிக்கட்சி ஆரம்பித்தே வருவார் என்றும் விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலில் இருக்கும் வரை விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் கூறப்படுகிறது