யூட்யூபில் சேனல் நடத்தி வரும் மதன் ரவிச்சந்திரன் தன்னை பற்றி அவதூறான கருத்துகளை பேசியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கந்த சஷ்டி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டன.
தனியார் தொலைக்காட்சி மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் மீது அவதூறு பேசியதாக யூட்யூப் சேனல் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவானது. அதை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த வீடியோவை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது யூட்யூப் சேனலில் தன்னை குறித்து அவதூறுகளை பரப்பியதாக மதன் ரவிச்சந்திரன் மீது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் மதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.