Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

Senthil Velan
செவ்வாய், 7 மே 2024 (20:47 IST)
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்துக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழகத்தில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். அமைச்சரின் கூற்றில் சிறிதும் உண்மையில்லை.
 
மின்துறை அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் பலரை தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா என்று விசாரித்தேன். கடந்த காலங்களில் இருந்த அதே நிலைமை தான் இப்போதும் நீடிப்பதாகவும், தொடர்ச்சியாக 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் உழவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமப்பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாடு தொடர்கிறது. பல இடங்களில் 150 முதல் 160 வோல்ட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனால் பல மின்சாதனங்களை இயக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
மின்துறை அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்துக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

அந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர்களிடம் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை கேட்டறியும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு தயாரா? தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4590 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை.

எனவே, தமிழகம் சிறப்பாக உள்ளது, செழிப்பாக உள்ளது என்பன போன்ற பொய் பிம்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்களை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments