திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வருகிற ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்ச்சியாக, மே 31ஆம் தேதி வசந்த திருவிழா தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நாளான ஜூன் 9இல் அதிகாலை 1 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பின்னர் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி மண்டபத்துக்குச் சென்று, மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
அன்றைய முக்கிய நிகழ்வாக, முனிக்குமாரர் சாப விமோசனம் வைபவம் நடைபெறும். பிறகு மகா தீபாராதனையில், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.