கருப்பர் கூட்டத்துடன் பாஜகவை எப்படி ஒப்பிடலாம் என வானதி சீனிவாசன் அதிமுகவிற்கு கண்டனம்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வேல் யாத்திரை திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடங்கும் என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இதுகுறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தியில் ”மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது. சாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரை, ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி” என குறிப்பிட்டது.
அதிமுகவின் இந்த கருத்து தங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கருப்பர் கூட்டத்துடன் பாஜகவை எப்படி ஒப்பிடலாம். இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கண்டித்துள்ளார்.