குளித்தலை அருகே ஆற்று வெள்ளத்தில் இறங்க போனவர்களை தடுத்ததால் வி.ஏ.ஓ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் – கருங்கல்பாளையம் இடையே உள்ள பாலத்தின் மீது ஏராளமானோர் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக பாலத்தின் மீது நின்று செல்பி எடுப்பதை தவிர்க்குமாறு அப்பகுதி காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.
குளித்தலை கடம்பன்துறையில் பாதுகாப்பு பணியில் ரத்தினம் என்ற வி.ஏ,ஓ ஈடுபட்டிருந்தபோது கோவையில் இருந்து வந்த இரண்டு பயணிகள் காவிரி ஆற்றில் இறங்க முயன்றுள்ளனர். அவர்களை ரத்தினம் தடுத்ததால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் ரத்தினத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். ரத்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.