தமிழகத்தில் உள்ள முக்கியமான மக்களவை தொகுதிகளில் ஒன்று கன்னியாகுமரி. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராகவும், பிரபல தொழிலதிபர் வசந்தகுமார் காங்கிரஸ் வேட்பாளராகவும் இங்கு போட்டியிடுகின்றனர். மேலும் அமமுக சார்பில் லெட்சமணனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் எபினேசரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தன்னிடம் பாஜகவினர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு தான் உடன்படவில்லை என்றும் நேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறினார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக மீதும் தினகரன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாஜகவும் தினகரனும் மறைமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த டிடிவிக்கு பாஜக தரப்பில் கூறப்பட்டதாக வெளியான தகவலுக்கு கன்னியாகுமரி காங். வேட்பாளர் வசந்தகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பலவீன வேட்பாளரை நிறுத்துங்கள் என்று கூறியதன் மூலம் பொன்ராதாகிருஷ்ணன் பின்பக்கம் வழியாக பதவிக்கு வர முயற்சிப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்றும் வசந்தகுமார் கூறியுள்ளார்.