Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மெரினாவில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்..! மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!

Chennai Corparation

Senthil Velan

, சனி, 8 ஜூன் 2024 (11:14 IST)
புதிய ஒப்பந்தம் விடும் வரை சாலையோரங்கள், கடற்கரைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை தி.நகர், பாண்டி பஜார், அண்ணா நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தை பகுதிகள் அடங்கிய பிரதான சாலைகளில் மாநகராட்சி சார்பில் சாலையோர வாகன நிறுத்தங்கள் உள்ளன. இவற்றுடன் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையோர சாலைகளிலும் வாகன நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாகன நிறுத்தங்களில் இருசக்கர வாகனங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என, மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்தது.
 
பாண்டி பஜார் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அங்கு வாகனங்களை நிறுத்தாமல், சாலையோர வாகன நிறுத்தங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாய் என ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
 
ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், நிர்ணயிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டண தொகையை விட, கூடுதலாக வசூலித்து வந்தனர். கட்டண விபரம் அடங்கிய பலகைகளில், இருசக்கர வாகனத்திற்கான 15 ரூபாய் கட்டண விபரத்தை மறைத்து, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் தலா 20 ரூபாய் வசூலித்தனர். அத்துடன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரசீதும் தரப்படுவதில்லை. 
 
இதேபோல் கடற்கரை, வணிக சந்தை பகுதிகளில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட 20 ரூபாய்க்கு பதிலாக 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை, சென்னை மாநகராட்சி ரத்து செய்தது.

ஆனால், அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாநகராட்சியின் ஒப்பந்த ரத்துக்கு தடை பெற்று மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், 'தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என, சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 1500 ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?